அன்புடன் நாகார்ஜுனன் அவர்கட்கு!
அவசரமான கணமொன்றில் அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் பற்றிய குறிப்பை உங்களுக்கு துணுக்குப்போல அனுப்ப நேர்ந்தது வருத்தமளிக்கிறது.
கவிஞர் த.துரைசிங்கம் அவர்களின் பைந்தமிழ் வளர்த்த ஈழத்துப் பாவலர்கள் எனும் கைநூலை சமீபத்திற்தான் படித்தேன். அதில் வரும் பகுதியே உங்களுக்கு அனுப்பியது. அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் பகுதியைப் படித்தபோது முப்பத்தைந்து வருடங்களிற்கு முன்னால் எனது தமிழாசிரியர் பண்டிதர் இராசரத்தினம் எமக்குப் பாடமொன்றை நிகழ்த்தியது நினைவில் வந்தது. சேனாபதி ஒருவன் தனது குதிரையில் புலவர் ஒருவரை எதிர்கொண்டு அவமானப்படுத்தியது அல்லது சேனாபதியின் குதிரை புலவரின் வயலை நாசப்படுத்தியிருக்கவேண்டும். படைத்தளகர்த்தனுக்கும் புலவருக்கும் பிரச்சனையாகிவிட்டது.பிரச்சனை மேலும் முற்றியபோது புலவர் தனது கவிதையால் அறம் பாடுகிறார்;
ஆர்த்த வாய்க்கால் அதுகடுத்த அம்மையே!
..............
காளிங்கன் ஏறும் குதிரையை மாளக்கொண்டுபோ!
குதிரை உடனே வீழ்ந்து இறந்துவிடுகிறது.
சேனாபதி புலவரிடம் மன்னிப்புக் கேட்கிறான்.
புலவர் படைத்தலைவனை மன்னித்துப் பாடுகிறார்:
ஆர்த்த வாய்க்கால் அதுகடுத்த அம்மையே!
காளிங்கன் ஏறும் குதிரையை மீளக்கொண்டுவா!
குதிரை மீளவும் உயிர்பெற்று எழுகிறது.
பண்டிதர் இராசரத்தினம் அவர்கள் இதைப் பாடம் நடாத்தும்போது அவர்கண்களில் இருக்கும் தீட்சண்யம்,நம்பிக்கையின் வடிவம்,அவர் உடல்மொழி,முகம் இவை காட்டும் அசாத்தியமான தோற்றம் இன்றும் என்ன, எப்போதுமே என்னால் மறக்க முடியாது.
புலிகள் முஸ்லிம் பெருமக்களை வடமாகாணத்திலிருந்து துரத்தியபோது
கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ; எனது இனம் அழிந்துபோகட்டும்! என கவிதை எழுதியபோது மு.போ வோ வில்வரத்தினம் அவர்களோ அடேய்! நீ கவிஞனடா ,அறம் பாடக்குடாதடா! எமது இனம் அழிந்துபோகுமடா! என்று அறிவுறுத்தியதாக செவிவழிச்செய்தி உண்டு.
கவித்துவ அறச்சீற்றம் நம் மரபில் இன்னும் தொடர்கிறது.
விதியோடு விளையாடும் ராகங்களே!
விளக்கேற்றி உயிர்காக்க வாருங்களே!
என்ற பாடலுக்கு சிவாஜியின் நடிப்பிற்குப் பிரபஞ்சத்தில் எதைக்கொடுத்தாலும் ஈடாகுமா?
பாட்டாலே விளக்கெரியச் செய்தபாவலர்
அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர்
_____________________________________
கவிஞர் த.துரைசிங்கம்(நன்றி;பைந்தமிழ் வளர்த்த ஈழத்துப் பாவலர்கள்)
பாட்டாலே விளக்கெரியச் செய்து பாட்டாலே விளக்கை அணையச் செய்தார் ஒருபுலவர். அவர்தான் ஈழத்திருநாடு தந்த இணையிலா இஸ்லாமியப்புலவர் அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர். இந்த அற்புதத்தை அவர் கண்டி மாநகரில் பல்லோர் முன்னிலையில் நிகழ்த்திக்காட்டினார்.
இறையருளும் நல்லிசைப்புலமையும் வாய்ந்த புலவரவர்கள் விளக்கெரியும்படி பாடிய வெண்பா பாடல் வருமாறு;
"எரிவாய் விரிந்தெழுந்து எண்ணெய் மேல் தோய்ந்து
கரிவாய் இருள்போகிக் காட்ட - அரியணையின்
தூண்டா விளக்கே! சுடர்விட்டு நீயென்முன்
ஈண்டிங் கெழுந்து எரி"
இவ்வாறு பாட்டால் தீபத்தை எரியச்செய்வது தீபசித்தி என்றழைக்கப்படும்.அட்டாவதானம்,தசாவதானம்,சதாவதானம் என்பவற்றில் எல்லாம் இது மேலானதாகும். இத்தகைய ஆற்றல்மிக்க புலவரவர்கள் பாட்டால் எரியச்செய்த விளக்கைப் பாட்டாலே அணைத்தும் காட்டினார்.அதற்காக அவர்பாடிய மற்றுமொரு வெண்பாவைப் பார்ப்போம்.
"தூண்டா மணிவிளக்கே! துகள்போக்கும் தூயொழியே
காண்டற்கரியதோர் காட்சியே!!! - வேண்டி
எரியவுனை வைத்ததுபோல் எல்லோரும் பார்க்க
அரியணையில் நீ நின்றணை"
இத்தகு ஆற்றல் மிக்க புலவரவர்களது சிறப்பிற்குத் தெய்வப்புலவர் திருவள்ளுவரின்
"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்"
எனும் குறளும்
"நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம்" எனும் தொல்காப்பியச் சூத்திரமும் தக்க சான்றாகும் எனலாம்.
இவ்வாறு அறிஞர் தம் முன்னிலையில் தமது ஆற்றலைக் காட்டிய புலவர் அவர்களின் செயலினைக் கண்ணாரக் கண்டுகளித்த பொன்னம்பலக் கவிராயர்
" எல்லா அதிசயத்தும் ஈது மிகப்பெரிதாம்
வால்லான்மெய்ஞ் ஞாநியப்துல்ல்காதிர் -பல்லார்முன்
பாட்டால் விளக்கெரித்துப் பாட்டதனாலேயணைத்துக்
காட்டியதோரிக்காட்சி காண்."
என்று பாடிப் பரவசமுற்றார்.
புலவர் பாடும் புலவராய் மெய்ஞ் ஞானியாய் விளங்கிய அப்துர்காதிர் கண்டிமாவட்டத்திலுள்ள "போப்பிட்டி"என்னும் சிற்றூரில் 1866.8.30 இல் பிறந்தவர்.இவரது தந்தையார் ஆ.பி.அல்லாப்பிச்சை ராவுத்தர்.தாயார் கவ்வா உம்மா. இளமையில் அரபுப்பள்ளியில் திருக்குரானும் தமிழ்ப்பள்ளியில் தமிழும் பயின்ற இவர் கண்டியில் உள்ள ராணி அக்கடமியில் (தற்போது அர்ச் போல்ஸ் கல்லூரி)ஆங்கிலம் கற்றார். பின் தமது மூதாதையரின் இடமான திருப்பத்தூருக்குச் சென்று மHமூது முத்துப் பாவாப்புலவரிடம் தமிழ் இலக்கண ,இலக்கியங்களைக் கற்றுத்தேர்ந்தார். தனது பதினாறாவது வயதிலே கவியரங்குகளில் கவிமழை பொழியத்தொடங்கினார்.யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த கவியரங்கொன்றில் (16 வயதில்)கவிமழை பொழிந்த இவரது புலமைத்திறனை வியந்தோர் அவ்வரங்கிலேயே இவருக்கு" அருள்வாக்கி"எனப் பட்டம் சூட்டி மகிழ்ந்தனர்.அன்றுமுதல் அருள் வாக்கி என்றே இவர் அழைக்கப்படலானார். உண்மையிலே அவர் அருள்வாக்கினராகவே விளங்கினார்.பலரது தீராத தீராத நோய்களைத்தீர்த்துவைத்தாரெனவும் கூறுவர்.